வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

 நமது நிலை

ஒரு குடிகாரன் தினமும் வீட்டிற்க்கு லேட்டாக வருவதால் அவன் மனைவி மிகவும் சிரமப்பட்டாள். தினமும் சண்டைதான். இறுதியில் ஒரு நாள் அவள் அவனிடம், இந்தா, வீட்டுச் சாவி. ஒன்று நீ வைத்துக் கொள். வெளியிலிருந்து கதவை திறந்துகொண்டு சத்தமில்லாமல் உள்ளே வந்து படுத்துக் கொள். என் தூக்கத்தை தொந்தரவு செய்யாதே. எந்த சத்தமும் போடாதே, பக்கத்து வீட்டுக்காரர்கள் தூக்கம் கெடும். வந்து படுத்துக் கொள். என்று கூறினாள்.

அந்த குடிகாரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அன்று அவன் வேண்டுமட்டும் குடித்தான். ஏனெனில் இன்று இதனால் எந்த பிரச்னையும் எழப் போவதில்லை என்ற சந்தோஷத்தில் இருந்தான். பின் வீடு வந்து சேர்ந்தான். அவன் எந்த சத்தமும் போடாமல் இருக்க முயற்சி செய்தான். கதவை திறந்து பாத்ரூம் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, பின் கண்ணாடியில் பார்த்தபோது, அடக் கடவுளே என்று சத்தமிட்டான்.

அவனது முகம் பூராவும் கீறல்களாக இருந்தது. அவன் பாரில் சண்டையிட்டதன் விளைவு. அந்த காயத்திலிருந்து ரத்தம் வேறு கசிந்து கொண்டிருந்தது. அவன் இப்போது நான் சத்தமின்றி சென்று படுத்து விடலாம். ஆனால் காலையில் இந்த காயங்களை பார்த்தவுடன் திரும்பவும் கத்த ஆரம்பித்து விடுவாளே. மறுபடியும் சண்டையாகி விடுமே. நான் இந்த காயங்களை மறைத்தாக வேண்டுமே, ஏதாவது ஆயின்மெண்டையாவது இதன் மீது தடவுகிறேன். என்று நினைத்தான்.

அவன் சுற்றும்முற்றும் பார்த்தான். அவனது மனைவியின் உதட்டு சாயத்தைத் தவிர வேறெதுவும் அவனுக்கு கிடைக்க வில்லை. அது ஆயின்மெண்ட் போல இருப்பதால் தனது காயங்களை மறைக்க அது உதவும் என அவன் நினைத்தான். அவன் வெற்றி பெற்று விட்டதாக நினைத்தான். சண்டையின்றி, யுத்தமின்றி அவனது வாழ்விலேயே மிக அழகான ஒரு இரவு என நினைத்தவாறே அவன் படுக்கைக்கு சென்றான்.

ஆனால் காலையில் அவன் மனைவி பாத்ரூமிலிருந்து சத்தம் போட்டாள். உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ஏன் எனது லிப்ஸ்டிக்கை பாழ் செய்திருக்கிறீர்கள் அது மட்டுமல்லாமல் ஏன் கண்ணாடிக்கு வர்ணம் பூசியிருக்கிறீர்கள் என்று கேட்டாள்.

அவன் குடிபோதையில் முகத்திற்க்கு ஆயின்மெண்ட் பூச நினைத்து, கண்ணாடியில் தெரிந்த தன் முகத்திற்க்கு லிப்ஸ்டிக்கை பூசியிருக்கிறான். கண்ணாடியில் எங்கெல்லாம் கீறல் இருந்த்தோ அங்கெல்லாம் ஆயின்மெண்ட் என நினைத்து லிப்ஸ்டிக்கை தடவியிருக்கிறான். லிப்ஸ்டிக் முடிந்தது, கண்ணாடியும் முடிந்தது.

இது எப்படி நடந்தது என்றே அவனுக்கு தெரியவில்லை. அவன், நான் உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆகவே நானே ஆயின்மெண்ட் பூசிக் கொண்டேன், இது மட்டும்தான் ஆயின்மெண்ட் போல இருந்தது. எனக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை, நான் ஏன் அதை கண்ணாடியில் பூசினேன் என்று எனக்குத் தெரியாது, நான் என் முகத்தில் தடவுவதாகத்தான் நினைத்தேன். என்றான்.

நாம் நமது மனேநிலையுடன் மிகவும் ஒத்து போய்விடுகிறோம், மேலும் அதையே நம்மை சுற்றிலும் பிரதிபலிக்கிறோம்.