வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தியான் சித்தார்த் – விவரம் தெரிந்த நாள் முதலாய் விவரம் தெரிந்து கொள்ள முடியாததைத் தேடுபவன். விசாரிப்பவன்.

 1975 ல் ஓஷோ அறிமுகம் – சிறு வயதிலேயே தேடல் துவங்கிவிட்டது. எல்லோரையும் போலவே எல்லா திசைகளிலும் தேடினேன். எனது தனிமையாய் இருந்து ரசித்த அனுபவங்கள் என்னை ஆன்மீகம் பக்கம் ஈர்த்தது. என்னை மிகத் தெளிவாக எனக்கு தெரிந்ததால் – என் குழப்பம், என் பயம், என் ஆசைகள், என் தந்திரங்கள், என் திறமை, என் இயலாமை – இப்படித் தெரிந்ததால், அதோடு இறப்பை நன்கு நான் அறிந்ததால், இவற்றிலிருந்து இன்பத்தைக் காட்டும் ஆன்மீகம் என்னை ஈர்த்தது. ஆக தனிமையும், வெறுமையும், வறுமையும் எனது தேடலை ஆழமான தேடலாக்கியது.

இது கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரரில் ஆரம்பித்து, இரமணரிடம் வந்து, பிறகு சிவானந்த பரமஹம்சரின் உபதேசம் பெற்று ஓஷோவில் முடிந்தது. நடுவில் காந்தீயம், கம்யூனிசம், நக்ஸல், வானவியல், விஞ்ஞானம், ஆர்தர் கோய்ஸ்லர், பெர்ணான்ட் ரஸ்ஸல் போன்ற ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், எழுத்து, கவிதை,  வங்கி வேலை, காதல்கள் எல்லாவற்றிலும் நுழைந்து திரும்பினேன்.

திருமணம் 1980-ல். மகன் பிறந்தது 1982. அதே ஆண்டு -சாஸ்வதம் ரஜினீஷ் தியான மையம் – உதயம்.

வங்கி வேலையை உதறல், பல தொழில்களில் ஈடுபடல், சொத்து சேர்ப்பதும் தொலைப்பதும், ஊட்டிவைத்த பயத்தால் பாதுகாப்புத்தேடி தேவையற்ற சிக்கல்கள் என 1995 வரை பெரும்பாலும் வீணான செய்கைகள்தான்.

ஆனால் ஓஷோவின் தியானங்களை விடாததும், அவரிடம் கொண்டிருந்த இடைவிடா தொடர்பும் எனக்குள் கண்ணாடியாய் நின்று பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

அதன் பயனாய் 1995-ல் எனது விருப்பபடியான எனக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் கொடுக்கும் வாழ்க்கைக்குள் எட்டிக்குதித்தேன்.

10 வருட பூனா வாசம். வாழ்க்கையில் முழுதாய் முழ்கினேன். எனது தாகம் தீர வாழ்ந்தேன். போலிகள் எல்லாம், முகமூடிகள் எல்லாம், பொய்கள் எல்லாம் தீய்ந்து நான் தானாய் வாழ ஆரம்பித்தேன்.

2006 ல் திரும்பவர நேர்ந்தது. 2008 ல் திரும்ப – ஓஷோ சாஸ்வதம் ஆன்மீகப்பள்ளி- செயல்பட ஆரம்பித்து. இந்த இணைய தளமும் பிறந்தது.

தியான் ப்ரியா – தியான் சித்தார்த்தின் ப்ரியை. தியானிக்க வருபவர்களின் தாய். வருபவர்கள் தங்கள் காதலிலிருந்து காபிகுடிப்பது வரை பகிர்ந்துகொள்ளும் தாய். டாய் சீ பயின்று வருகிறார்கள்.

நிர்தோஷ் – ஓஷோ சந்நியாசிகளின் குழந்தை. தனது 18 மாதத்தில் சந்நியாசம் பெற்றவன். சமூகம் அவனைத் தொடவில்லை. அவனும் சமூகத்தைத் தொடுவதாயில்லை. ஓஷோவின் பரம சீடன்.  அவனுக்கு திருமணமாகிவிட்டது. அவனது மனைவியும் ஓஷோ சந்நியாசி தான் அவனது மனைவியின் பெயர் ஆனந்த மைதிலி.

இந்த நாங்கள் மூவரோடு ஆரம்பித்த ஓஷோ சாஸ்வதம் எனும் ஆன்மீகப் பள்ளியில் பயில இப்போது தியான் மைத்ரேயா, மா தேவ ஸகீரா, தேவ நிசிமோ, மா ப்ரேம் மேஹா, தேவ சந்தேஷ், நரேன், ப்ரேம் பரம், போதிதர்மா, காஷ்யப், மா பிரேம் வன்யா, பிரேம் சாஹர், தியான் ஜோர்பா, மா பிரேம் பவித்ரோ, மா பிரேம் மைத்ரேயி ஆகியோர் சங்கமித்திருக்கிறார்கள்.

இந்த ஓஷோ ஆன்மீகப் பள்ளி சுயமரியாதை, சுதந்திரம், தன்ணுணர்வு, எழுச்சியாளனாயிருத்தல் ஆகிய குணங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதேயன்றி எந்த கருத்து, கொள்கை, கோட்பாடு, விதி, சட்டம் என்ற அடிப்படையில் இயங்குவதல்ல. நிகழ்கணத்தை விழிப்புணர்வோடு நேர்கொள்ளும் வாழ்வே இது இயங்கும் மையம்.

சுதந்திரமான எழுச்சிமிக்க தன்ணுணர்வோடு கூடிய தனிநபர்கள் கூடி வாழும் விதத்தை பயில்வதே இதன் இயக்கம் . இங்கு அவரவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியும், மலர்ச்சியுமே முக்கியம். ஆன்மீகப்பள்ளி என்ற அமைப்பு வெறும் பயன்பாட்டு கருவியே, அதன் வளர்ச்சி என்ற மாயைக்கு இங்கு இடமில்லை.

இது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். அதோடு இங்கு ஓஷோவின் ஞானசக்தி மண்டலத்தில்  கரைபவர்களாகவும் உருவாக்குபவர்களாகவும் நமது தியானம் புதிய பரிமாணம் கொள்கிறது. மேலும் நமது பிரபஞ்ச இணைப்புணர்வை உணரவும் அதில் மூழ்கவும் அந்த மையத்திலிருந்து இந்த உலகை வாழவும் நாம் பயிலும் ஒரு இடம் இது.

தன்னை முழுமையாய் தானாய் தன்மயமாய் தன்னியல்பில் கரைந்து உணர்ந்து வாழ, தன்னையே முழுதாய் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் தைரியம் கொண்ட ஓஷோ அன்பர்களுக்கான இடம் இது.

வருக. வருக.